கேரளா வெள்ள பாதிப்பை அரசியலாக்க விரும்பவில்லை – ராகுல் காந்தி

கேரளா வெள்ள பாதிப்பை அரசியலாக்க விரும்பவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

                கேரளாவில் 2 வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக அம்மாநிலத்தின் 14 மாவட்டங்களிலும் வெள்ளப் பெருக்கும், பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் சிக்கி 450-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் முற்றிலுமாக சேதம் அடைந்தன. லட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

                 இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தை பார்வையிட  இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, . நேற்று வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். 2-வது நாளாக இன்றும் ராகுல் காந்தி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் சந்தித்து  வருகிறார்.

                  இதனிடையே கொச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கவே வந்திருப்பதாகவும்,அரசியல் செய்ய வரவில்லை எனவும் கூறினார். நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்கள் கவலையில் உள்ளதாகவும், இது தொடர்பாக கேரளா முதல் அமைச்சரிடம் பேசியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

                   மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து இழப்பீடு தொகை விரைவாக வழங்க வேண்டும் எனவும், நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு போதிய நிதி வழங்கவில்லை என்பது வருத்தம் அளிப்பதாகவும் ராகுல்காந்தி தெரிவித்தார்.

Related Posts