கே.வி.குப்பத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும்-பழனிசாமி

கே.வி.குப்பத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

வேலூர் தொகுதி மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து கே.வி.குப்பம் தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நாட்டு மக்களுக்கு நல்லது செய்யும் அதிமுக அரசை, யாராலும் வீழ்த்த முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

அதிமுக அரசு மேற்கொண்ட பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டார். மழை நீர் வீணாகாமல் தடுக்க நீர் மேலாண்மை திட்டத்தை உருவாக்கி இருப்பதாக தெரிவித்தார். தடுப்பணைகள் கட்ட ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், 100 நாள் வேலை திட்டம் தொடரும் என்றும் அறிவித்தார்.

தான் ஒரு விவசாயியாக இருக்கின்ற காரணத்தால், விவசாயிகளுக்கு என்ன வேண்டும் என்பது தனக்கு தெரியும் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், கிராம மக்களுக்கு தேவையான திட்டங்களை அதிமுக அரசு வழங்கி வருகிறது என்றார். தேர்தல் முடிந்த உடன் அனைத்து தொழிலாளர் குடும்பத்திற்கும் 2000 ரூபாய் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.

பிரச்சாரத்தின் இடையே மழை பெய்த போதும் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கே.வி.குப்பத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.

இதனிடையே, வேலூரில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திமுக, காங்கிரஸ், அமாமுக  ஆகிய கட்சிகளிலிருந்து பிரிந்து 200-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். இதில் அமைச்சர்கள் வீரமணி,கருப்பண்ணன்,செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர்

Related Posts