கைது செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது

பிரதமர் மோடியை கொல்ல சதி என கூறி மனித உரிமை ஆர்வலர், இடதுசாரி சிந்தனையாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மகாராஷ்டிராவின் கோரேகான்-பீமா கிராமத்தில் வன்முறை வெடித்தது. மராத்தா சமூகத்தினரும், தலித் சமூகத்தினரும் மோதிக் கொண்டனர். வன்முறையை தூண்டும்வகையில் பேசியதாக கடந்த ஜூன் மாதம் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் டெல்லியில் பிடிபட்ட ஒருவரிடம் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், “ராஜீவ் காந்தி கொலை பாணியில், பிரதமர் மோடியை கொலை செய்வோம்” என்று மாவோயிஸ்டுகள் எழுதி இருந்ததாக கூறப்பட்டது. அந்த கடிதத்தில், ஐதராபாத்தை சேர்ந்த இடதுசாரி எழுத்தாளர் பி.வரவர ராவின் பெயர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரை கைது செய்ய புனே போலீசார், நேற்று ஐதராபாத்துக்கு வந்தனர். ஐதராபாத் போலீசாரின் ஒத்துழைப்புடன், வரவர ராவ் வீட்டில் சோதனை செய்த போலீசார் பின்னர் அவரை  கைது செய்தனர்.

இதேபோல், அரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடந்த சோதனையில், இடதுசாரி சிந்தனையாளரும், வழக்கறிஞருமான சுதா பரத்வாஜ் கைது செய்யப்பட்டார். மும்பையில் மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் வெர்னன் கோன்சல்வ்ஸ், அருண் பெரேரா, டெல்லியில் சிவில் உரிமை ஆர்வலர் கவுதம் நவலகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். காவல்துறையின் இந்த நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், வரலாற்று ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக ரோமிலா தபார், தேவகி ஜெய்ன் உள்ளிட்ட 5 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன் இன்று பிற்பகல் 3.45 மணிக்கு விசாரணைக்கு வர உள்ளது.

Related Posts