கொடியேற்றத்துடன் தொடங்கிய குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா

உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

மைசூர் தசரா திருவிழாவிற்கு அடுத்தபடியாக மிகவும் பிரசித்தி பெற்றது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு அருகேயுள்ள குலசேகரப்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா. இந்தக் கோயிலில் தசரா திருவிழா இன்றிலிருந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த ஆண்டு தசரா திருவிழா, இன்று காலையில் கொடியேற்றுத்துடன் தொடங்கியது. இன்றிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காப்புகட்டி 10 நாள்கள் விரதம் இருப்பார்கள்.

தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகிஷாசுர வதம் அக்டோபர் 8-ம் தேதி நடைபெறுகிறது. சூரசம்ஹார நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருவார்கள். திருமணத் தடை, நோய்கள் நீங்க, குழந்தை பேறு வேண்டி என பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்துவார்கள். விநாயகர், முருகன், காளி, குறவன் குறத்தி, போலீஸ், பைத்தியம் என விதவிதமான வேடமணிந்த பக்தர்கள், தனியாகவோ அல்லது குழுவாகவோ பொதுமக்களிடம் சென்று தர்மம் எடுப்பர். இப்படி 10 நாட்களும் எடுத்த தர்மத்தில் சேர்ந்த பணத்தை சூரசம்ஹாரத்திற்கு மறுநாள் கோயிலில் உள்ள உண்டியலில் செலுத்துவார்கள்.

 

Related Posts