கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளம் மும்பை மாநகரம் தத்தளிக்கிறது.

மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. 15 முதல் 18 சென்டி மீட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்ததால் சயன், மடுங்கா, மகிம், அந்தேரி, மலாட், தகிசர், கல்யாண், செம்பூர், சாண்டா க்ரூஸ் உள்ளிட்ட மாநகர பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது.

வால்துனி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் கல்யாண் பகுதியில், நீந்திச் செல்லும் அளவுக்கு தண்ணீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது.

கனமழை வெள்ளத்தால், மும்பையில் சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தண்டவாளங்கள் வெள்ளக்காடாகி உள்ளதால் ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுவரை 7 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 9 ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. கோலாப்பூர் – மும்பை இடையே இயங்கும் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயில், பத்லப்பூர் – வாங்கனி இடையே நின்றது. இதன் காரணமாக ரயிலில் உள்ள 2 ஆயிரம் பயணிகள் பீதியில் உறைந்துள்ளனர். அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளது.

இதேபோல் கனமழை காரணமாக, மும்பை விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 9 விமானங்கள் திருப்பி விடப்பட்டன..இந்நிலையில் அடுத்து வரும் நாட்களில் அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதால், பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே தங்கியிருக்கும்படி மராட்டிய மாநில அரசு  அறிவுறுத்தியுள்ளது.

Related Posts