கொல்கத்தா விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையரை விசாரிக்க அனுமதிகோரி சிபிஐ உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இரு வழக்குகள் தொடர்பாக மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த மோசடி தொடர்பாக கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் நேற்று அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது காவல் ஆணையரின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், சிபிஐ அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர். இதனிடையே மேற்குவங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி நேரடியாக காவல்துறை ஆணையரின் வீட்டுக்கு வந்தார். இதைத்தொடர்ந்து அவர் மத்திய அரசை கண்டித்தும், அரசியல் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. தர்ணாவில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி, மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார். இந்நிலையில், மம்தா பானர்ஜி தொடர்ந்து இன்று 2-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மம்தா பானர்ஜி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடத்திற்கு அருகே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் குவிந்து உள்ளனர். இந்நிலையில் மேற்கு வங்க அரசின் எதிர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனுதாக்கல் செய்து உள்ளது. நிதி நிறுவன வழக்கில் ஒத்துழைக்க கொல்கத்தா காவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் மனு மீது நாளை விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

Related Posts