கொள்ளையர்களால் தாக்கப்பட்டு மீண்டு வந்த லாவண்யா: காவல் ஆணையரை நேரில் சந்தித்து நன்றி

 

 

சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த பெரும்பாக்கத்தில் வழிப்பறி கொள்ளையர்களின் தாக்குதலால் காயம் அடைந்து காப்பற்றப்பட்ட லாவண்யா, இன்று சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

சென்னை அருகே நாவலூரில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து வருபவர் லாவண்யா ஜனத் (30). ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர். இவர் பணி முடிந்து கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி இரவு தனியாக தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.

பெரும்பாக்கம் – தாழம்பூர் சாலையில் உள்ள அரசன் காலனி என்ற இடத்தில் சென்றபோது இவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சிலர் இவரது தலையில் இரும்புக் கம்பியால் பலமாகத் தாக்கி வழிப்பறி செய்தனர். அவர் அணிந்து இருந்த தங்க நகை, மடிக்கணினி, பணம், 2 செல்போன்கள் மற்றும் லாவண்யா ஓட்டிவந்த ஸ்கூட்டரைக் கொள்ளையடித்துச் சென்றனர். பள்ளிக்கரணை போலீஸார் லாவண்யாவை மீட்டு பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சேர்ந்தனர். வழிப்பறி கொள்ளை தொடர்பாக செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த நாராயணமூர்த்தி (19), விநாயக மூர்த்தி (20), லோகேஷ் (19) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். வழிப்பறி கொள்ளையர்களின் தாக்குதலில் காயம் அடைந்து பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லாவண்யா மூன்று நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார்.

அப்போது மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த லாவண்யாவை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கடந்த பிப்ரவரி 18 அன்று நேரில் சென்று நலம் விசாரித்தார். தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதி அளித்தார்.

இந்நிலையில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறிய லாவண்யா குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க ஆணையிட்டு, வழிப்பறி பொருட்களை மீட்டு பின்னர் தன்னை நேரில் சந்தித்து நலம் விசாரித்து தைரியம் சொன்ன காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு நன்றி தெரிவிக்க இன்று காவல் ஆணையர் அலுவலகம் வந்தார்.  விஸ்வநாதனை சந்தித்து நன்றி கூறிய லாவண்யா பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘என்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து என்னை காப்பாற்றிய காவல்துறையினருக்கு நன்றி. தைரியத்தால் மட்டும் நான் விடுபடவில்லை, காவல்துறையினர், நண்பர்கள் என பல தரப்பிலும் எனக்கு ஆதரவும், உதவியும் அளித்தனர் அவர்களுக்கு எனது நன்றி’’ எனக் கூறினார்.

Related Posts