சந்திரசேகர ராவ்- மு.க.ஸ்டாலின் சந்திப்பு, மரியாதை நிமித்தமானது:  திமுக தலைமை அறிவிப்பு

மத்தியில் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்படும் பட்சத்தில் பா.ஜ.க., காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியின் ஆட்சியை அமைக்கும் முயற்சியில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவரும், தெலங்கானா முதலமைச்சருமான சந்திரசேகர ராவ் ஈடுபட்டுவருகிறார். இதற்காக, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாபானர்ஜி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் சந்திரசேகரராவ் இன்று சந்தித்து  பேச்சுவார்த்தை நடத்தினார். திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு ஆகியோரும் அப்போது உடன் இருந்தனர். கருணாநிதியின் மார்பளவு வெண்கல உருவசிலையை ஸ்டாலின், சந்திரசேகரராவுக்கு பரிசளித்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் வரை இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது  பாஜக, காங்கிரசுக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைக்க ஆதரவு தர வேண்டும் என்று சந்திரசேகரராவ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் ஒரே அணியில் திரளும் விதத்தில் கூட்டணியில் இணையுமாறு ஸ்டாலின் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், வரும் 21 ஆம் தேதி டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் சந்திசேகரராவ் கலந்து கொள்ள வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் இருதரப்பிலும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில்  திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் சந்திரசேகர ராவ்- மு.க.ஸ்டாலின் சந்திப்பு,மரியாதை நிமித்தமானது என்று தெரிவித்துள்ளது.

Related Posts