சந்திரயான்-2 திட்டம் 98 சதவீதம் வெற்றி : மூத்த விஞ்ஞானிகள் கேள்வி

சந்திரயான்-2 திட்டம் 98 சதவீதம் வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தது குறித்து மூத்த விஞ்ஞானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சந்திரயான்-2 திட்டம் இரு வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளதாக கூறியிருந்த சிவன், அதை அறிவியல், மற்றும் தொழில்நுட்பம் என இரண்டாகப் பிரித்தார். அதன்படி அறிவியல் என்ற நோக்கத்தில் முழுமையாக வெற்றி பெற்றுவிட்டதாகவும், தொழில்நுட்பம் விஷயத்தில் வெற்றியின் சதவீதத்தை ஏறக்குறைய முழுமையாக அடைந்துவிட்டதாகவும் கூறினார். இதன் அடிப்படையிலேயே சந்திரயான்-2 திட்டம் 98 சதவீதம் வரை வெற்றி என்று கூறுவதாக அவர் விளக்கம் அளித்தார். இது குறித்து மூத்த விஞ்ஞானிகள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இஸ்ரோ தலைவருக்கான ஆலோசகர் தபன் மிஸ்ரா, சிவனின் பேச்சை மறைமுகமாக விமர்சித்துள்ளார். ஆழமாக சுயபரிசோதனை செய்யாமல் கருத்து தெரிவிப்பது, உலகத்தின் முன்னாள் நம்மை நகைப்புக்கு ஆளாக்கிவிடும் என மூத்த விஞ்ஞானி ஒருவர் தெரிவித்தார். 5 இஞ்சின்களுக்கு பதிலாக ஒரே ஒரு இஞ்சினை இஸ்ரோ பயன்படுத்தி இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ள மற்றொரு மூத்த விஞ்ஞானி, அதுதான் கையாள்வதற்கு மிகவும் எளிதாக இருந்திருக்கும் என கூறியுள்ளார். உலகம் முழுவதும் ஒரு இஞ்சினை பயன்படுத்தும் வழக்கம்தான் இருந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts