சந்திரயான் 2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலைவர்கள் வாழ்த்து.

சந்திரயான் 2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திரமோடி மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது குறித்து சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அனைத்து இந்தியர்களும் பெருமை கொள்ள வேண்டிய தருணம் என்று கூறியுள்ளார். விஞ்ஞானிகள், பொறியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள அவர், புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய திட்டங்களை முன்னெடுப்பதில் இஸ்ரோ, ஆசானாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சந்திரயான்- 2 புதிய கண்டுபிடிப்புகளுக்கு அது வழிவகுக்கும் என்றும் அறிவுசார் அமைப்புகளை இத்திட்டம் வளப்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ள ராம்நாத் கோவிந்த்,  சந்திரயான் இரண்டின் ஒவ்வொரு வெற்றிக்கும் வாழ்த்துவதாக கூறியுள்ளார். இதனிடையே சந்திரயான் 2 ஏவப்படுவதை, தனது அலுவலகத்தில் உள்ள தொலைக்காட்சி வாயிலாக நேரில் பார்வையிட்ட பிரதமர் நரேந்திரமோடி   இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்  மிளிறும் வரலாற்றின் சிறப்பான தருணங்கள் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அறிவியலின்  எல்லையை அளக்க விரும்பும் 130 கோடி இந்தியர்களின் உறுதியையும், விஞ்ஞானிகளின் வலிமையையும் சந்திரயான் 2 காட்டுவதாக அவர்குறிப்பிட்டுள்ளார். அறிவியல், உயர் தர ஆராய்ச்சிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள இளைஞர்களை சந்திரயான்- 2 ஊக்கப்படுத்தும் என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். இதேபோல் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து மாநிலங்களவையில் பேசிய அவர், சந்திரயான்2 விண்ணில் ஏவப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்த சாதனை என்றும், இந்திய விஞ்ஞானிகள் சிறப்பு பாராட்டுக்கு உரியவர்கள் என்றும் கூறினார்.  நாட்டின் பெருமையை விஞ்ஞானிகள் உயர்த்தி விட்டதாக அவர் பெருமிதம் தெரிவித்தார். . இதனை தொடர்ந்து மக்களவையிலும் சந்திரயான் 2  விண்கலத்தை வெற்றிகரமாக ஏவிய  விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நிலவில் தடம் பதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவை இடம்பெறச் செய்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், பொறியாளர்களுக்கும் தமிழக மக்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்

Related Posts