சந்திரயான் 2 விண்கலம், நிலாவின் சுற்றுவட்டப்பாதையில் 2 ஆண்டுகள் இயங்கும்-இஸ்ரோ

சந்திரயான் 2 விண்கலம், நிலாவின் சுற்றுவட்டப்பாதையில் 2 ஆண்டுகள் இயங்குவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நிலாவில் தண்ணீர் மற்றும் தாதுக்கள் இருக்கிறதா என்பதை ஆராய்வதற்காக கடந்த 22 ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலத்தை வெற்றிகரமாக இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. அந்த விண்கலத்தில் இருந்து ஒரு கலம் பிரிந்து நிலாவில் தரையிறங்கும் விதத்திலும், அதிலிருந்து ரோபோ போன்ற ஆய்வூர்தி நகர்ந்து சென்று ஆய்வு நடத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆர்பிட்டர் எனப்படும் விண்கலம் ஓராண்டு காலம் சந்திரனை சுற்றி வந்து ஆய்வு செய்யும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருந்தார்.

ஆனால் திட்டமிட்டபடி அனைத்தும் நிறைவேறினால், ஆர்பிட்டரின் ஆய்வுக் காலம் இரண்டு ஆண்டாக நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகள் சிலர் தெரிவித்தனர். விண்ணில் செலுத்தப்பட்டது முதல், தற்போது வரை 2 முறை விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 9 முறை உயர்த்தப்பட இருப்பதாக தெரிவித்தனர். சந்திரயான் 2 விண்கலம் ஏவப்படும் போதும் அதில் உந்து சக்தியாக செயல்படுவதற்கான 1697 கிலோ எரிபொருள் இடம்பெற்றிருந்தது.

நிலாவின் சுற்றுவட்டப்பாதைக்குள் செல்லும் போது இந்த எரிபொருள் அளவு 290 கிலோவாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதே அளவு சரியாக இருந்தால் நிலாவை சுற்றி வந்து இரண்டு ஆண்டுகள் வரை சந்திரயான் விண்கலத்தால் ஆய்வு நடத்த முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்தனர். ஆகஸ்ட் 20 ஆம் தேதி நிலாவின் சுற்றுவட்டப்பாதையை சந்திராயன் அடையும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அப்போது எவ்வளவு எரிபொருள் மீதம் இருக்கிறது என்று துல்லியமாக மதிப்பிட முடியும் என்றும் கூறப்படுகிறது.

Related Posts