சன்ரைசர்ஸ் ஐதராபாத்யை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி

கிங்ஸ் லெவன் பஞ்சாப் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 22-வது லீக் ஆட்டம் மொகாலியில் நேற்று நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பேர்ஸ்டோவ் 1 ரன் எடுத்த நிலையில் முஜீப் உர் ரஹ்மான் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வார்னர் உடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார். இருவரும் பஞ்சாப் வேகப்பந்து வீச்சை எதிர்த்து ரன்கள் குவிக்க திணறினர். அணியின் ஸ்கோர் 56 ரன்னாக இருக்கும்போது   விஜய் சங்கர்  26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த முகமது நபி 12 ரன்னில் வெளியேறினார்.  18-வது ஓவரில் 8 ரன்களும், 19-வது ஓவரில் 10 ரன்களும், கடைசி ஓவரில் 15 ரன்களும் எடுத்த  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி  20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. பின்னர் 151 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின்  தொடக்க வீரர்கள் கிறிஸ் கெயிலும், லோகேஷ் ராகுலும் களம் இறங்கினர். கெயில் 16 ரன்னில் ஆட்டமிழந்ததை அடுத்து ராகுலுடன் அகர்வால்  ஜோடி சேர்ந்தார்.. ராகுல் அரை சதம் அடித்ததை தொடர்ந்து அகர்வாலும் அரை சதம் அடித்தார். 19 புள்ளி 5 ஓவரில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டை இழந்து 151 ரன் எடுத்து வெற்றி பெற்றது. லோகேஷ் ராகுல் 70 ரன்னுடனும், சாம் குர்ரான் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

Related Posts