சபரிமலையை கலவர பூமியாக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சி – பினராயி விஜயன் 

  சபரிமலையை கலவர பூமியாக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சிப்பதாக கேரள முதல் அமைச்சர்  பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.

வெளிநாடு சென்றுள்ள முதல் அமைச்சர்  பினராயி விஜயன், இது தொடர்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் சபரிமலை கோவிலுக்கு உள்ள தனித்தன்மையை ஆர்.எஸ்.எஸ். ஏற்றுக்கொண்டதில்லை எனவும், எந்த மதத்தை சேர்ந்தவரும் வழிபடக் கூடிய தனித்தன்மை கொண்டது சபரிமலை எனவும் கூறியுள்ளார். ஆதிவாசிகள் பூஜை செய்து வந்த கடந்த கால சம்பிரதாயத்தை ஒழித்துக் கட்டியது சங்பரிவார் போன்ற அமைப்புகள்தான் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.. மேலும், சாதி மேலாதிக்கத்தை நிறுவும் எண்ணத்தோடு சபரிமலையை கலவர பூமியாக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலை தொடர்ந்தால் பிற்படுத்தப்பட்டவர்கள் சபரிமலையில் இருந்து அகற்றப்படுவார்கள் என அவர் எச்சரித்துள்ளார்.

இதனிடையே சபரிமலை வழக்கில் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி பிராமணர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சபரிமலையில் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படும் நம்பிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளதாகவும், அதனை மறுஆய்வு செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம், நாயர் சர்வீஸ் சொசைட்டி உள்ளிட்ட அமைப்புகள் சார்பிலும் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts