சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் அனுமதி

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிப்பது பற்றி வரும் 3-ந்தேதி திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நித்திய பிரம்மச்சாரி கோலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் நுழைய ஆண்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. பெண்களில் 10 வயதிற்கு மேல் 50 வயதிற்குட்பட்டவர்கள் யாரும் இக்கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பு வெளியானதும், திருவிதாங்கூர் தேவசம் போர்டு உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது ஆகம விதிகளுக்கு முரணாக அமையும் என்று கூறினர். மண்டல பூசைக்கான விழா தொடங்க இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், அதற்கு முன்பு வரும் 17-ந்தேதி மாலை 5 மணிக்கு ஐப்பசி மாத பூசைக்காக அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. 18-ந்தேதி அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அப்போது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிப்பது பற்றி ஆலோசிக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு திட்டமிட்டுள்ளது. இதற்காக வருகிற 3-ந்தேதி அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் இதுவரை பெண்கள் அனுமதிக்கப்பட்டதில்லை என்பதால் அங்கு பெண்களுக்கான எந்த அடிப்படை வசதியும் இல்லை. சபரிமலை வரும் பெண்கள் பம்பையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு விடுவார்கள். பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானம் வரை பெண்களுக்கான கழிப்பறைகளோ, தங்கும் அறைகளோ,  கிடையாது. இனி சபரிமலைக்கு வரும் பெண்களுக்காக அடிப்படை வசதிகள் அனைத்தையும் புதிதாக உருவாக்க வேண்டும். சபரிமலைக்கு வரும் பக்தர்களில் விரதம் இருந்து இருமுடி கட்டி வருபவர்களே 18 படிகள் ஏற வேண்டும் என்ற ஐதீகம் உள்ளது. இந்நிலையில் 18-ம் படி ஏற ஆண், பெண் இருவரையும் எப்படி அனுமதிப்பது என்பதை முடிவு செய்யவேண்டும். இதற்கான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொண்டு வருவதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனை நாளை சந்தித்து பேச உள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்நிலையில்,  உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கேரளாவில் அக்டோபர் 1-ம் தேதி மாநிலம் தழுவிய 12 மணிநேர முழு அடைப்பு போராட்டத்துக்கு சிவசேனா கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

 

Related Posts