சபரிமலை விவகாரத்தில் மாற்றம் இல்லை : முதலமைச்சர் பினராயி விஜயன்

சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என அந்த மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதிபடக் கூறியுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது. மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணி அரசு இந்த தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுத்தது. ஆனால் இதற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், சபரிமலை விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அவசர சட்டம் கொண்டு வருவோம் என பா.ஜ.க. ஏற்கனவே கூறியிருந்ததாக குறிப்பிட்டார். ஆனால் தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சட்டம் கொண்டு வரமுடியாது என அவர்கள் வெளிப்படையாக கூறுவதாகவும், அவர்களை நம்பியவர்களை இது ஏமாற்றுவது போல் இல்லையா? என அவர் வினவினர். சபரிமலை பக்தர்களுக்கு துணை நிற்போம் என்பதை தெளிவுபடுத்தி விட்டதாகவும், சபரிமலை விவகாரத்தில் மாநில அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அவர் கூறினார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதே தங்களது நிலைப்பாடு என்று கூறிய பினராயி விஜயன், இந்த பிரச்சினையில் நீதிமன்றம் வேறு ஏதாவது உத்தரவிட்டால், அதன்படிதான் செயல்படுவோம் என்று தெரிவித்தார்.

Related Posts