சமஸ்கிருதம், இந்தி, இந்துத்துவா போன்றவற்றை நுழைக்க மத்திய அரசு முனைப்பு : வைகோ குற்றம்சாட்டு

சமஸ்கிருதம், இந்தி,  இந்துத்துவா போன்றவற்றை கல்வித் துறையில் நுழைக்க மத்திய அரசு முனைப்பு காட்டுவதாக மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொறியியல் கல்லூரிகளில், தத்துவ இயல் பாடத்தின் கீழ் பகவத் கீதையை ஒரு பாடமாகப் படிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து இருப்பது மிகப்பெரிய தவறு என்றார். பொறியியல் மாணவர்கள் பகவத் கீதையைப் படிக்க வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார்.

ரயில்வே துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பது மிகப்பெரிய ஆபத்து என்று வைகோ எச்சரித்துள்ளார். சேவைத் துறையை, மத்திய அரசு வர்த்தகத்துறை ஆக்குவதாகவும், இதனால், பயணிகள் கட்டணம், சரக்குக் கட்டணம் உயர்வது மட்டுமல்ல, அனைத்துப் பொருள்களின் விலைவாசி ஏற்றத்துக்கும் காரணமாகிவிடும் என அவர் குறிப்பிட்டார்.

நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். மோடி அரசின் நூறு நாட்களில் மக்களுக்கு வேதனைதான் மிஞ்சியிருக்கிறதே தவிர, அரசு எதுவும் சாதித்துவிடவில்லை என்று அவர் தெரிவித்தார். இந்துத்துவா போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Related Posts