சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகளை நம்பி மாணவர்கள் திசை மாறிவிடக்கூடாது

சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகளை நம்பி மாணவர்கள் திசை மாறிவிடக்கூடாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

சென்னை : மே-04

சென்னை பச்சையப்பன் கல்லூரியின் 175-வது ஆண்டு விழா இன்று காலை நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.பி அன்பழகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பச்சையப்பன் கல்லூரியின் 175-வது ஆண்டு விழா நினைவு தூணை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திறந்துவைத்தனர்.

பின்னர், விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாணவர்களின் கல்வியை பாதிக்கச் செய்ய பல சக்திகள் முயற்சிப்பதாக தெரிவித்தார். மாணவர்கள் வாட்ஸ் அப்பில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட முதலமைச்சர், மாணவர்கள் கவனத்தை சிதறடிக்கும் வலைதளங்கள், வாட்ஸ் அப் ஆகியவற்றை கவனமுடன் கையாள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, விழாவில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 175-வது ஆண்டிலும் பச்சையப்பன் கல்லூரி மாறாத தரத்துடன் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், பச்சையப்பன் கல்லூரியில் படிப்பதும், பணி புரிவதும் பெருமை என்றும் அவர் கூறினார்.

Related Posts