சாதி, மத வேற்றுமைகளை மறந்து, மனித நேயம் வளர்ப்போம்: வைகோ 

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகம் முழுமையும், மதவாதமும், பேரினவாதமும் வலுப்பெற்று வளர்ந்து வருவது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற கொடூரத் தாக்குதல்கள், மனித நேயம் மனம் கொண்டோரைப் பதைபதைக்கச் செய்து இருப்பதாகவும்,  359பேரை பலி வாங்கி இருக்கின்ற இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பு ஏற்றுள்ள ஐஎஸ்அமைப்பு, நியூசிலாந்து நாட்டில் மசூதி மீது நடத்தப்பட்டதாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதலை நடத்தியதாக தெரிவித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  யாரோ ஒரு இனவெறியன் செய்த தவறுக்காக, எந்தக் குற்றமும் செய்யாத பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள்  கொல்லப்பட்டுள்ளனர்எனவும்  அவர்களது உற்றார், உறவினர்கள் கதறி அழும் காட்சிகள் நெஞ்சைப் பிளப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.நியூசிலாந்து தாக்குதலை. உலகமே கண்டித்து இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள வைகோ,  பழிக்குப் பழி என்ற கருத்தை எந்த மதமும் போதிக்கவில்லை எனவும், அனைத்து மதங்களும், அன்பையும், அறத்தையுமே வலியுறுத்துவதாகவும் கூறியுள்ளார்.

உலக அரங்கில் மாறி வரும் அரசியல் சூழ்நிலைகள் குறித்து கவலை தெரிவித்துள்ள வைகோ, மனித உரிமைகளை வலியுறுத்தும்ஐரோப்பாவின் பல நாடுகளில், அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில், வெள்ளை இனவெறியை வளர்க்கும் வலதுசாரிக் கட்சிகள் ஆட்சியைப் பிடித்து இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.  அங்கேயும் சிறுபான்மையினர் புறக்கணிக்கப்படுகின்ற சூழ்நிலைகள் உருவாகி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகால பாஜக ஆட்சியில், ஆர்எஸ்எஸ், சங் பரிவார் கும்பலின் வழிகாட்டுதலோடு, சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகவும்,  அதனால், ஐஎஸ்போன்ற வன்முறை  இயக்கங்கள், இந்தியாவிலும் தாக்குதல் நடத்துகின்ற சூழல் உருவாகி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெரியார், அண்ணா ஆகிய பெருந்தகைகளின் வழிகாட்டுதலில், திராவிட இயக்கத்தால் பண்படுத்தப்பட்ட தமிழகத்திலும், சாதி மத வெறிப் பேச்சுகள் பெருகி வருவதாகவும். சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும்  இத்தகைய கருத்துகளுக்கு. இளைஞர்கள் பலியாகி விடக் கூடாதுஎனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். சாதி, மத மோதல்களால் பாதிக்கப்படுவோர் அப்பாவிப் பொதுமக்கள்தான் எனவும் வேற்றுமைகளை மறந்து, எல்லோரும் ஓர் குலம்; எல்லோரும் ஓர் நிறை என்ற உணர்வோடு, மனித நேயம் வளர்ப்போம் எனவும் அந்த அறிக்கையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Related Posts