சாரிடான் உள்ளிட்ட 3 மருந்துகள் மீதான தடை நீக்கம்

சாரிடான் உள்ளிட்ட 3 மருந்துகள் மீதான தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2 அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகளை குறிப்பிட்ட விகிதத்தில் சேர்த்து தயாரிக்கப்படும் மருந்துகள் எப்.டி.சி. மருந்துகள் என அழைக்கப்படுகிறது. இந்த மருந்துகளை இந்திய மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் சோதனை செய்தபோது 344 வகையான மருந்துகள் குறிப்பிட்ட விகித சேர்க்கை இன்றியும், அலட்சியமாகவும் தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மருந்துகள் உடல் நலத்துக்கு கேடு என்பதால் கடந்த 2015-ம் ஆண்டு அவை தடை செய்யப்பட்டன. இதை எதிர்த்து சில மருந்து நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதை விசாரித்த நீதிமன்றம், இந்த மருந்துகளின் தயாரிப்பு குறித்து மீண்டும் ஆய்வு செய்யுமாறு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.

அதன்படி இந்திய மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியத்தின் சிறப்பு வல்லுனர் குழு மீண்டும் இந்த மருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்தியது. இதில் 328 வகையான மருந்து தயாரிப்பில் மோசடிகள் நடைபெறுவது மீண்டும் உறுதி செய்யப்பட்டது. எனவே அந்த மருந்துகளை தடை செய்யுமாறு நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. இதைத்தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்பு அந்த மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இந்நிலையில், மத்திய அரசின் தடைக்கு எதிராக மருந்து நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், முதற்கட்டமாக சாரிடான், டார்ட் மற்றும் பிரிட்டான் ஆகிய மூன்று மருந்துகளுக்கும் விதிக்கப்பட்ட தடையை நீக்கி விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது.

Related Posts