’சாஹோ’ படத்தின் இயக்குனருக்கு பிரெஞ்ச் பட இயக்குனர் அறிவுரை

கதையை திருடி படம் எடுத்தால் ஒழுங்காக எடுங்கள் என்று ’சாஹோ’ படத்தின் இயக்குனருக்கு பிரெஞ்ச் பட இயக்குனர் அறிவுரை கூறியுள்ளார்.

பிரபாஸ் ஹீரோவாக நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியான பிரமாண்டமான ஆக்‌ஷன் படம், சாஹோ. சுஜித் இயக்கியுள்ள இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் வெளியானது. இந்தப் படம் ’லார்கோ வின்ச்’ என்ற பிரெஞ்ச் படத்தின் காப்பி என்று கூறப்படுகிறது. ’சாஹோ’வைப் பார்த்த ரசிகர்கள் சிலர், லார்கோ வின்ச் படத்தின் இயக்குனர் ஜெரோம் சல்லே-வுக்கு Tag செய்து ட்வீட் செய்திருந்தனர். சாஹோ படத்தைப் பார்த்துவிட்டு சாலே டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், லார்கோ வின்ச் படத்தின் இரண்டா வது இலவச ரீமேக் இது எனவும், முதல் ரீமேக்கை விட இது மோசமாக இருக்கிறது எனவும் கூறியுள்ளார். திருடினாலும், தயவு செய்து அதை ஒழுங்காக செய்யுங்கள் எனவும் அவர் விமர்சித்துள்ளார். ’லார்கோ வின்ச்’ படம் 2008 ஆம் ஆண்டு வெளியானது. ஏற்கனவே, பவன் கல்யாண் நடிப்பில் வெளியான அக்னியாதவாசி என்ற தெலுங்கு படம், ’லார்கோ வின்ச்’ படத்தின் காப்பி என்று கூறப்பட்டது.

Related Posts