சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வில் சென்னை மண்டலத்தில் 93.87 சதவீதம் பேர் தேர்ச்சி

சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. சென்னை மண்டலத்தில் 93.87 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சென்னை : மே-26

சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வுகள் மார்ச் 5 முதல் ஏப்ரல் 13 வரை நடைபெற்றன. 11 லட்சத்து 86 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். பொருளியல், கணக்குப் பதிவியல் உள்ளிட்ட வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்ததாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து பொருளியல் பாடத்திற்கு மட்டும் சி.பி.எஸ்.இ. மறுதேர்வை நடத்தியது.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. cbse.nic.in, cbseresults.nic.in, results.nic.in ஆகிய இணைய தளங்கள் மூலம் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். எஸ்எம்எஸ் மூலமும், பிரத்யேக தொலைபேசி எண்கள் மூலமும் முடிவுகளை தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வில் நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 83.01 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மண்டல வாரியாகப் பார்க்கும்போது சென்னை மண்டலம் 93.87 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் இரண்டாமிடம் பிடித்துள்ளது. திருவனந்தபுரம் மண்டலம் 97.32 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் முதலிடத்திலும், 89 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் டெல்லி மண்டலம் மூன்றாமிடத்திலும் உள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த மேக்னா ஸ்ரீவத்சவா 500-க்கு 499 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

Related Posts