சிமெண்ட் விலை உயர்வைக் கட்டுப்படுத்துங்கள்: வைகோ

இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் கட்டுமானத் தொழில் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றது.  மணல் தட்டுப்பாடு சாதாரண மக்கள் வீடு கட்டுவதைக் கனவாக்கி வருகின்றது. தாறுமாறான விலைக்கு மணல் விற்கப்படுவதை, அரசு கண்டு  கொள்ளவில்லை.  இரும்பு, அலுமினியம் 30 விழுக்காடு உயர்ந்து விட்டது.  போக்குவரத்துச் செலவு, மின்சாரம், தொழிலாளர் ஊதியம் போன்றவை அதிகரித்துள்ளதும், கட்டுமானத் தொழில் நெருக்கடிக்குக் காரணங்கள் ஆகும்.

மணலுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ‘எம்சாண்ட்’ விலையும் தற்போது இரண்டு மடங்கு உயர்ந்துவிட்டது.

இந்நிலையில், சிமெண்ட் விலை பத்து நாட்களில் மூட்டைக்கு 100 ரூபாய் உயர்ந்துள்ளது. தற்போது 50 கிலோ சிமெண்ட் மூட்டை 400 ரூபாய் அளவுக்கு அதிகரித்து சில்லரை விற்பனையில்  37 விழுக்காடு விலை உயர்த்தப்பட்டுள்ளது. சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்கள் காரணம் இன்றி சிமெண்ட் விலையை அதிகரித்து இருப்பதால், அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகள் ஒட்டுமொத்தமாக முடங்கும் நிலைமை ஏற்பட்டு இருக்கின்றது.

தமிழகத்தில் கட்டுமானத் தொழிலை மட்டுமே நம்பி சுமார் ஒரு கோடியே இருபது இல ட்சம் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

சிமெண்ட்  உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் நடுத்தரக் குடும்பங்கள் வீடு கட்டுவதற்கான செலவு கூடுதல் சுமையாகி,  கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுமானத் தொழில் முனைவோர் அரசுக்கு விடுத்துள்ள வேண்டுகோளின்படி, ஜி.எÞ.டி. நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு இருந்ததைவிட தற்போது சிமெண்ட் விலை கடுமையாக உயர்ந்துள்ளதை ஆய்வு செய்து, தேசியக் கண்காணிப்பு ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆந்திரம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் சிமெண்ட் விலை ரூ.330 ஆக இருக்கும்போது, தமிழ்நாட்டில் கூடுதலாக ரூ.50 இல் இருந்து 80 வரை உயர்த்தப்பட்டு இருப்பது ஏற்புடையது அல்ல.

எனவே மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, சிமெண்ட் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதுடன், சிமெண்ட்டுக்குக் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்திட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

எனத் தெரிவித்துள்ளார்.

Related Posts