சிறப்பு ஆசிரியர்கள், பயிற்சியாளர்களின் மதிப்பூதியம் 14 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்

சிறப்பு ஆசிரியர்கள், பயிற்சியாளர்களின் மதிப்பூதியம் 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 14 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை : ஜூன்-13

தமிழக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 110வது விதியின் கீழ் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், சிப்காட் நிறுவனத்தால் திருச்சி மாவட்டம் கண்ணுடையான் பட்டி, கே.பெரியபட்டி, சத்திரப்பட்டி ஆகிய பகுதிகளில் ஆயிரத்து 77 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் தொழில் பூங்கா, 96 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம் ஆலத்தூர் கிராமத்தில், 70 புள்ளி மூன்று மூன்று ஏக்கர் நிலப்பரப்பில், 84 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சிட்கோ தொழிற்பேட்டையின் இரண்டாவது பகுதி நிறுவப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் சிப்காட் நிறுவனத்தால் அமைக்கப்பட்டு வரும் தொழில் பூங்காவை மேம்படுத்த 52 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் 6 கோடி ரூபாய் செலவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இரண்டு குடியிருப்புகள் கட்டப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். திருப்பூர் பல்லடத்தில் 5 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் ஒருங்கினைந்த நீதிமன்றம் கட்டப்படும் எனவும் முதலமைச்சர் கூறினார்.

சிறைகளில் செல்போன் பயன்படுத்துவதை தடுப்பதற்கான செல்போன் ஜாமர் கருவிகள் பொருத்த 10 கோடியே 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். மாற்றுத் திறன் பள்ளிகளில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஊதியம் 10ஆயிரம் ரூபாயில் இருந்து 14 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் அறிவித்தார்.

Related Posts