சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கு: சாமியார் ஆசாராம் பாபுவுக்கு வாழ்நாள் சிறை தண்டனை

 

 

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் குஜராத் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு வாழ்நாள் சிறை தண்டனை வழங்கி ஜோத்பூர் சிறப்பு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கி உள்ளது.

ஏப்ரல்-25 

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் படித்து வந்த சிறுமியை பலாத்காரம் செய்ததாக சாமியார் ஆசாராம் பாபு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் ஆசாராம் பாவுவை கடந்த 2013-ம் ஆண்டு, ஆகஸ்ட் 31-ம் தேதி கைது செய்தனர். இவர் மீது போக்சோ, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர். சாமியார் ஆசாராம் பாபு, உதவியாளர்கள் சிவா, சில்பி, சரத், பிரகாஷ் ஆகிய 4 பேர் மீது 2013-ம் ஆண்டு நவம்பர் 6-ம் தேதி காவல்துறையினர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வழக்கு சிறப்பு எஸ்.சி.,எஸ்.டி. நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, 2017, மே 19-ம்தேதி முதல் இந்த வழக்கில் வாதம் தொடங்கியது. ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடந்துவந்த இந்த வழக்கில், அரசு தரப்பில் 44 சாட்சிகளிடமும், சாமியார் தரப்பில் 31 சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்த நிலையில் நிலையில் நீதிபதி மதுசூதன் சர்மா ஜோத்பூர் சிறைக்கு இன்று காலை சென்று, சிறுமியை பாலத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என்று அறிவித்தார். தண்டனை விவரங்கள் பிற்பகலில் அறிவிப்படும் என்று அறிவித்துச் சென்றார். அதன்படி பிற்பகலில் தீர்ப்பளித்த நீதிபதி மதசூதன் சர்மா, சிறுமியை பலாத்காரம் செய்த குற்றத்துக்காக போக்சோ சட்டம் மற்றும் எஸ்சி,எஸ்டி சட்டத்தின்படி சாமியார் ஆஸாராம் பாபுவுக்கு வாழ்நாள் சிறை விதித்தார். அவரின் உதவியாளர்கள் சரத், சில்பி ஆகியோருக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், அதற்காக தீர்ப்பு விபரங்களை முழுவதுமாக படித்து வருவதாகவும் சாமியார் ஆசாராம் பாபுவின் ஆசிரம செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Related Posts