சிறையில் கைதிகள் பிரியாணி தயாரிக்கும் வீடியோ : சிறைத்துறை அதிகாரிகள் விளக்கம்

புழல் சிறையில் கைதிகள் பிரியாணி தயாரிக்கும் வீடியோ அண்மையில் எடுக்கப்பட்டதல்ல என்று சிறைத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக சமீபத்தில் புகைப்படங்கள் வெளியானது. இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, டி.வி.க்கள், செல்போன், மெத்தைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 5 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். மேலும் தலைமை வார்டன்களும் வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனிடையே, புழல் சிறையில் கைதிகள் பிரியாணி சமைப்பது போன்றும், அவற்றை கைதிகள் சாப்பிடுவது போன்றும் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது. கைதிகளுக்கு அதிகாரிகள் தொடர்ந்து வசதிகள் செய்து கொடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், லஞ்சம் வாங்கி கொண்டு பிரியாணி மற்றும் சிகரெட் உள்ளிட்டவை கைதிகளுக்கு  தருவதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், கைதிகள் பிரியாணி தயாரிக்கும் வீடியோ சமீபத்தில் எடுக்கப்பட்டதல்ல எனவும், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளதாகவும் சிறைத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும், சிறைத்துறை நிர்வாகத்தின் பெயரை களங்கப்படுத்தும் நோக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.  ரம்ஜான் பண்டிகையின் போது, சிறைத்துறை விதியின்படி முஸ்லிம் கைதிகளுக்காக அவர்களது உணவை தயாரிக்க அனுமதிக்கப்பட்டதாகவும், உணவு பொருட்கள் வெளியில் இருந்து வாங்கி கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்த அதிகாரிகள், இந்த ஆண்டும், ரம்ஜான் பண்டிகையின்போது கைதிகள் நோன்பு இருக்கவும், சிறைக்குள் பிரியாணி தயாரிக்கவும், அனுமதி வழங்கப்பட்டதாக கூறியுள்ளனர்.

Related Posts