சிலம்பொலி செல்லப்பனார் மறைவு வைகோ இரங்கல்

இதுக் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்கூறும் நல்லுலகம் பாராட்டிப் போற்றி வந்த பெருமகன் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது.

பழந்தமிழ்நாட்டின் சிறப்பையும். பண்பாடு மற்றும் தமிழ் மக்களின் செம்மாந்த வாழ்வியல் நெறிகளையும் எடுத்து இயம்பும் குடிமக்கள் காப்பியமான சிலப்பதிகாரத்தை, பட்டி தொட்டிகளில் கொண்டு சேர்த்த பெருமை சிலம்பொலி செல்லப்பனார் அவர்களுக்கு உண்டு.

1953 ஆம் ஆண்டு இராசிபுரம் இலக்கிய மன்ற விழாவில் செல்லப்பனார் ஆற்றிய சிலப்பதிகாரச் சொற்பொழிவைக் கேட்டு மகிழ்ந்த தமிழறிஞர் சொல்லின் செல்வர் இரா.பி.சேதுபிள்ளை அவர்கள் ‘சிலம்பொலி’ எனும் சிறப்புப் பட்டயத்தை வழங்கி அவரை வாழ்த்தினார். தன் வாழ்நாள் முழுவதும் சுமார் 65 ஆண்டுகளாக தனக்கே உரிய தனித்துவமான முறையில் ‘சிலம்பின்’ சிறப்பை முழங்கியவர் சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள் என்றால் மிகை ஆகாது.

சிலப்பதிகாரம் பற்றிய முழுமையான ஆய்வு நூலாக ‘சிலம்பொலி’ எனும் படைப்பை வழங்கிய செல்லப்பனார் அவர்கள், ‘மணிமேகலை தெளிவுரை’ எனும் மணிமேகலை காப்பியத்தை விளக்கும் நூலையும் இயற்றினார்.

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணி, பத்துப்பாட்டு, பதினென்கீழ்க்கணக்கு நூல்களை தனது சொற்பொழிவுகள் மூலம் மக்களிடையே பரப்பி, சங்க இலக்கியத் தேன் சொரிந்த பெருமையும் சிலம்பொலியாருக்கு உண்டு.

திருக்குறளின் மீது அளவற்ற ஈடுபாடு கொண்டு தமிழ்நாடு முழுவதும், ஏன் உலகம் எங்கும் தமிழர்களிடையே ‘உலகப் பொதுமறை திருக்குறள்’ சொற்பொழிவுகளை ஆற்றி, செந்தமிழுக்கு சீரிய தொண்டாற்றியவர் சிலம்பொலி செல்லப்பனார்.

ஆயிரக்கணக்கான நூல்களுக்கு ஆய்வு அணிந்துரைகள் வழங்கி, தமிழுக்கு அணிகலனாக விளங்கும் வகையில் ‘அணிந்துரை இலக்கியம்’ படைத்தவர் சிலம்பொலி செல்லப்பனார் மட்டுமே.

சங்க இலக்கியங்களில் தோய்ந்து தனது நுண்மான் நுழைப்புலத்தால் ஆய்வுக் கட்டுரைகளைத் தீட்டியும், மேடைகளில் மெல்லிய பூங்காற்றாக சொற்பொழிவு ஆற்றியும் தமிழ் இலக்கிய உலகுக்கு விண்முட்டப் புகழ் சேர்த்தார்.

“இயற்கையோடு ஒன்றி இலக்கியம் படைத்தவர்கள் சங்கத் தமிழர்கள், சங்க காலத்தில் சாதியும் இல்லை; சண்டையும் இல்லை” என்று உறுதிபட கூறிய சிலம்பொலியார், ஆண்டுதோறும் “சிலப்பதிகார மாநாடு நடத்தப்பட வேண்டும்” என்பதை தனது பெருங்கனவாகக் கொண்டிருந்தார்.

தனது ஈடு இணையற்ற புலமையாலும், அளப்பரிய தொண்டாலும் வரலாற்றில் என்றும் வாழும் கீர்த்தியைப் பெற்றுவிட்ட சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள் என் மீது பொழிந்த பேரன்பை எந்நாளும் மறக்க முடியாது.

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள் மறைவு தமிழகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரை நேசிக்கும் தமிழ் அன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனத் தெரிவித்துள்ளார்.

Related Posts