சிலைக்கடத்தல் வழக்கில் சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் தொடரலாம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ மாற்றிய தமிழக அரசின் அரசாணையை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததுடன், சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேல் தொடரலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது.

சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் விசாரித்துவந்தார். அந்த விசாரணையில் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் உட்பட பல முக்கிய நபர்களுக்கு தொடர்பு உள்ளதாக தெரியவந்தது.

இதில் தொடர்புடைய பல அரசு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். இதனிடையே பொன். மாணிக்கவேலை ரயில்வே பாதுகாப்பு படைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

இதுதொடர்பான வழக்கில் சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை பொன். மாணிக்க வேல் தொடர்ந்து விசாரிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து இந்த வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அரசின் உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்ததுடன் பொன் மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக பணியாற்றுவார் என்றும் தெரிவித்தது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது. பொன். மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக தொடரலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அவர் வழக்குகளை விசாரிக்க எந்த தடையும் இல்லை என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், விசாரணையின் போது அவர் கைது செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

Related Posts