சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுப்பு

சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுப்பு தெரிவித்துள்ளதையடுத்து இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

            தமிழகத்தில் தொடரப்பட்டுள்ள சிலைக் கடத்தல் வழக்குகளில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் தொடர்பு இருப்பதால் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. இது தொடர்பாக தமிழக அரசு  அரசாணையும் வெளியிட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி யானை ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்தனர். இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்க முடியாது என சிபிஐ தெரிவித்ததாக தமிழக அரசு கூறியது. உயர்நீதிமன்ற தடையால் மேல் நடவடிக்கையை தொடர முடியவில்லை என்று கூறியுள்ள மத்திய அரசு, சிலைக் கடத்தல் வழக்குகள் தொடர்பான விவரங்களை அனுப்பும்படி கேட்டுள்ளது’ என்றும் தமிழக அரசு வழக்கறிஞர் கூறினார்.

            இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், சிபிஐக்கு மாற்றுவது தொடர்பாக உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் அரசாணை பிறப்பித்தது ஏன்? என கேள்வி எழுப்பினர். மேலும், சிபிஐ மறுப்பு தெரிவித்து கடிதம் அனுப்பியது தொடர்பாக ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர். இதற்கிடையே, ஆள் பற்றாக்குறையால் சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்க முடியாது என்று சிபிஐ கூறியுள்ளது. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Related Posts