சிவந்தி ஆதித்தனாரின் 83-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

மறைந்த டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 83-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

தினத்தந்தி’ நிறுவனர், சி.பா.ஆதித்தனார் — கோவிந்தம்மாள் தம்பதிக்கு மகனாக, 1936 செப்டம்பர் 24ம் தேதி சிவந்தி ஆதித்தனார் பிறந்தார். தனது தந்தை, பத்திரிகை அதிபராக இருந்தபோதிலும், அச்சு கோர்ப்பது முதல், துணை ஆசிரியர் வரை, அனைத்திலும், சிவந்தி ஆதித்தன் பயிற்சி பெற்றார். 1959ல், அந்நாளிதழின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ந் தேதி அவர் காலமானார். அவரது பிறந்த நாளான இன்று, போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சார்பில், துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதேபோல், தமிழக அரசு சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், கராத்தே தியாகராஜன், வணிகர் சங்க தலைவர் வெள்ளையன், அமமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி உள்ளிட்டோரும் சிவந்தி ஆதித்தனார் திருவுருப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். காமராஜர், அண்ணாமலை, மனோன்மணியம் சுந்தரனார், சென்னை பல்கலைக் கழகங்கள், சிவந்தி ஆதித்தனாருக்கு டாக்டர் பட்டம் வழங்கின. 1982 மற்றும் 1983ம் ஆண்டுகளில், இரண்டு முறை, சென்னை மாநகர ஷெரீப் ஆக அவர் நியமிக்கப்பட்டார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின், வாழ்நாள் தலைவராக பணியாற்றிய அவருக்கு, 2008ல், மத்திய அரசு, ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கவுரவித்தது.

Related Posts