சுகாதாரத்துறை அமைச்சரை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவி நீக்கம் செய்யாதது ஏன்: வைக்கோ

குட்கா லஞ்ச ஊழலில் சந்தேக நிழல் படிந்துள்ள சுகாதாரத்துறை அமைச்சரை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவி நீக்கம் செய்யாதது ஏன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் உள்ள குட்கா நிறுவனம்  ஒன்றில் கடந்த 2016 ஜூலை 8 ஆம் தேதி  நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக வருமான வரித்துறை,  தமிழக அரசு தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநருக்கு கடிதம் அனுப்பியதாகவும், அதில், , சுகாதாரத்துறை அமைச்சர், சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு குட்கா நிறுவன பங்குதாரர் மாதவராவ் கையூட்டு வழங்கிய விபரம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வருமான வரித்துறை அனுப்பிய கடிதத்தின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது மட்டுமல்ல, ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சென்னை காவல் ஆணையர் டி.கே.இராஜேந்திரன் காவல்துறை தலைவராகவும், பதவி உயர்வு பெற்ற அவலம் நடைபெற்றது எனவும், ஊழல் கறைபடிந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் வாக்காளர்களும் பணப்பட்டுவாடா செயப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 35 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்லில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளருக்கு 89 கோடி ரூபாய் தொகை செலவு செய்யப்பட்டது குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அதிலும் முதன்மையான குற்றச்சாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதுதான் எழுந்தது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனை அடுத்து குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில்,சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னணியில்தான் சிபிஐ தற்போது சோதனை நடத்தி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சந்தேகத்தின் நிழல்படிந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை அமைச்சரவையிலிருந்து வெளியேற்றி தமிழக முதல்வர் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளாதது ஏன் என்ற கேள்வி எழுவதாகவும், இதற்கு பதில் கூற முதல்வர் கடமைப்பட்டு இருக்கிறார் எனவும் அவர் கூறியுள்ளார். சிபிஐ சோதனையில் சிக்கிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்கப்பட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், காவல்துறைக்கு தீராத களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஊழல் புகாருக்கு உள்ளான காவல்துறை தலைவர் டி.கே.இராஜேந்திரனை பணியிடை நீக்கம் செய்வதுடன், குட்கா ஊழலில் தொடர்புடைய அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

 

Related Posts