சுங்கக் கட்டண உயர்வு சுரண்டலின் உச்சம்

சுங்கக் கட்டண உயர்வு சுரண்டலின் உச்சம் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது என்பது குறித்து, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு அளித்த விளக்கம், கந்து வட்டியை நியாயப்படுத்தும் வகையில் உள்ளதாக சாடியுள்ளார். கடந்த பதிமூன்றரை ஆண்டுகளில் சுங்கக் கட்டணமாக வசூலிக்கப்பட்ட ஆயிரத்து 98 கோடியில், 63 சதவீத தொகையான 682 கோடி ரூபாய், பராமரிப்பு மற்றும் இயக்குதலுக்காக செலவாகிவிட்டது என்பதை ஏமாளிகள் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்திலுள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் சுங்க வசூல் மையம் அமைப்பதற்காக உண்மையான செலவு, இதுவரை உண்மையாக வசூலிக்கப்பட்ட சுங்கக் கட்டணம் குறித்து பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி, இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் அலுவலக உயரதிகாரிகள் உள்ளிட்டோரைக் கொண்ட ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts