சுட்டுரை நிர்வாகி ஜாக் டோர்சேவுடன் வெள்ளை மாளிகையில் டிரம்ப் ஆலோசனை

உலக அளவில் சுட்டுரையில் அதிக பின்தொடர்பவர்களை வைத்திருக்கும் தலைவர்களில் முக்கியமானவர் அமெரிக்க அதிபர் டிரம்ப். ஆனால் அண்மை காலமாக சுட்டுரையில் தன்னை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாகவும், சுட்டுரை நிறுவனம் தனக்கு எதிராக செயல்படுவதே இதற்கு காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டி வந்தார். மேலும், சுட்டுரை நிறுவனம் பழமைவாதிகளுக்கு எதிரான போக்கை கையாண்டு வருவதாகவும், தனது சுட்டுரைப் பக்கத்தில் இருந்து ஏராளமானவர்களை நீக்கியதோடு, தனது ஆதரவாளர்கள் சுட்டுரையில் இணைவதற்கான வழிமுறைகளை கடினமாக்கிவிட்டதாகவும் டிரம்ப் குற்றச்சாட்டியிருந்தார். ஆனால் டிரம்பின் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் சுட்டுரை  நிறுவனம் மறுத்து வந்தது. இந்நிலையில், சுட்டுரை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சேவை, வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து டிரம்ப் சந்தித்து பேசினார். அப்போது டிரம்ப், சுட்டுரையில் தன்னை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கான காரணங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் சுட்டுரை நிறுவனத்தின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Posts