சுதந்திர தினத்தை யொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சுதந்திர தினத்தை யொட்டி குடியரசுத் தலைவர் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், சமூக பண்புகள், கலாச்சாரம், பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசியல் தலைமை பண்புகளால் உலகம் முழுவதும் மதிக்கப்படும் நாடாக இந்தியா விளங்குகிறது என பெருமையுடன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சாதி மத பேதங்களை களைந்து சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாய் உழைத்து இந்தியத் திருநாட்டை வல்லரசு நாடாகவும், தமிழ்நாட்டை நாட்டிலேயே முதன்மை மாநிலமாகவும் உயர்த்த உறுதியேற்போம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், நாட்டு சுதந்திரமும், பொருளாதார சுதந்திரமும் பெற்று, வறுமையில்லாமல் வாழ்வதற்கு வகை செய்யும் சுதந்திர தினமாக அமையட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா வல்லரசு நாடாக ஆவதற்கு சாதி, மதம், இன பாகுபாடின்றி, ஒற்றுமையும், அமைதியும், முன்னேற்றமும் ஏற்படவும், வறுமை ஒழியவும் இந்த சுதந்திர தினநாள் வழிவகுக்கக்கட்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் விடுத்துள்ள சுதந்திரதின வாழ்த்தில், உண்மையும், அறிவும், அன்பும் சுடர்விடும் இந்தியாவை உருவாக்க சுதந்திர நன்னாளில் சபதமேற்போம் என கூறியுள்ளார்.

நாட்டில் அமைதி, வளம், செழிப்பு, மகிழ்ச்சி, சகோதரத்துவம் ஆகியவற்றை பெருக்க இந்தியாவின் 73-ஆவது விடுதலை நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், உலகளவில் இந்தியாவை வல்லரசாகவும், மற்ற நாடுகளுக்கு வழிகாட்டக்கூடிய நாடாகவும் அமைய சுதந்திர தினத்தில் உறுதியேற்று நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts