செங்கல்பட்டில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம் அமைக்கப்படும்

செங்கல்பட்டில் 60 கோடி ரூபாய் மதிப்பில், யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை : ஜூன்-25

தமிழக சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார். அப்போது பேசிய அவர், உலகத்தரம் வாய்ந்த “சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம்” செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் 60 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும் என்று கூறினார்.

தமிழ்நாட்டில் உள்ள 985 துணை சுகாதார நிலையங்கள், ஒருங்கிணைந்த சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களாக, 82 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தற்போது கட்டப்பட்டுள்ள சிறப்பு அடுக்குமாடி கட்டடத்தில், 4-வது தளம் முதல் 6-வது தளம் வரை, மேலும் மூன்று தளங்கள் 55 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், தற்போது கட்டப்பட்டு வரும் புறநோயாளிகள் பிரிவு கட்டடத்திற்கு மேல், கூடுதலாக நான்கு தளங்கள், 42 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சீர்காழி, திருத்தணி, ஓமலூர், திருச்செந்தூர், பரமக்குடி, பண்ருட்டி, ஆரணி ஆகிய அரசு வட்ட மருத்துவமனைகளில், 30 கோடி ரூபாய் செலவில் கூடுதல் கட்டடம் கட்டப்படும் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சைக்காக, 22 கோடி ரூபாய் செலவில் நவீன கருவிகள் நிறுவப்படும் என்று கூறினார்.

கும்பகோணத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் “மகப்பேறு மற்றும் குழந்தை நல ஒப்புயர்வு மையம்” ஒன்று 20 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

எழும்பூர், பூவிருந்தவல்லி மற்றும் விழுப்புரம் ஆகிய மூன்று இடங்களில் உள்ள துணை செவிலியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு, 17 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டித் தரப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

Related Posts