சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் இன்று அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டம்

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை சுமுகமாக நடத்தி முடிக்க, தேர்தல் அதிகாரிகள் முழுவீச்சில் பணியாற்றி வருகின்றனர். வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்கும்படி தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தல் செலவுகளை கண்காணிக்க அனைத்து தொகுதிகளுக்கும் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகள், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டு பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் பணிகளை ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் நேற்று சென்னை வந்தனர். 

இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் சென்னையில் இன்று தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன், சுனில் அரோரா ஆலோசனை நடத்துகிறார். இதையடுத்து நாளை வருமான வரித்துறை, சுங்கத்துறை போன்ற முக்கிய துறைகளின் அதிகாரிகள், தேர்தல் தொடர்பு அதிகாரிகளை தேர்தல் ஆணையர்கள் சந்தித்து பேசுகின்றனர். பின்னர், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி. போன்ற மாநில உயர் அதிகாரிகளுடனான கூட்டம் நடைபெறுகிறது. பிற்பகல் ஒரு மணிக்கு செய்தியாளர்களை தேர்தல் ஆணையர்கள் சந்திக்கின்றனர். அப்போது தமிழகத்தில் எடுக்கப்பட்டுள்ள தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகள் பற்றி எடுத்துரைக்கப்படும் என கூறப்படுகிறது.

Related Posts