சென்னையில் பெட்ரோல் விலை 80 ரூபாயை நெருங்கியுள்ளது

சென்னையில் நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு பெட்ரோல் விலை 80 ரூபாயை நெருங்கியுள்ளது.

சென்னை : மே-20

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஓராண்டாக தினசரி அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை உயர்த்தியும், குறைத்தும் வருகின்றன. இந்நிலையில், கர்நாடக தேர்தலையொட்டி பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. அதன்பின்னர் கடந்த 7 நாட்களாக விலை உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 70 காசுகளும், டீசல் விலை ஒரு ரூபாய் 76 காசுகளும் அதிகரித்துள்ளன. இன்று காலை நிலவரப்படி, பெட்ரோல் விலை 35 காசுகள் உயர்ந்து 79 ரூபாய் 13 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று, டீசல் விலை 28 காசுகள் உயர்ந்து 71 ரூபாய் 32 காசுகளுக்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையும் பேரலுக்கு 80 டாலராக விலை உயர்ந்துள்ளதால், பெட்ரோல் டீசல் விலை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரியை இம்மாத இறுதியில் மத்திய அரசு குறைக்க உள்ளதாக தகவல்கள் வெளியானபோதும், இது குறித்த உறுதியான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts