சென்னையில், மாநகர போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்

சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். இந்நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி போக்குவரத்து ஊழியர்கள் இன்று காலை திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஜூன் மாத ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து போராட்டம் நடத்துவதாக அவர்கள் தெரிவித்தனர். வழக்கமாக மாத இறுதி நாளில் ஊழியர்களின் வங்கிக் கணக்கில் ஊதியம்செலுத்தப்படும்என்றும்  ஆனால் ஜூன் மாதத்திற்கான ஊதியம் இன்று வரை வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறினர். போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் காரணமாக கிண்டி, வடபழனி, வியாசர்பாடி, தாம்பரம், ஆவடி, உள்ளிட்ட இடங்களில் பேருந்துகள் புறப்படவில்லை. இதனால் மாணவ-மாணவிகள், பணிக்கு செல்வோர் செய்வதறியாது திகைத்து நின்றனர். இதனிடையே, இன்று மாலைக்குள் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. நேற்று விடுமுறை நாள் என்பதால் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த முடியவில்லை என தெரிவித்த அதிகாரிகள்,  குறைவான ஊதியம் என்ற வதந்தியை நம்ப வேண்டாம் என  கேட்டுக் கொண்டனர். அதிகாரிகள் விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை  கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

Related Posts