சென்னையில் மேலும் 2 முக்கிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை

சென்னை சென்ட்ரல் – நேருபூங்கா, டிஎம்எஸ் – சின்னமலை இடையிலான சுரங்கவழிப் பாதைகளில் மெட்ரோ ரயில் போக்குவரத்தைத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சென்னை : மே-25

சென்னையில் நேருபூங்காவில் இருந்து திருமங்கலம் கோயம்பேடு ஆலந்தூர் வழியாகப் பரங்கிமலை வரையிலும், சின்னமலையில் இருந்து கிண்டி, ஆலந்தூர் வழியாக விமான நிலையம் வரையிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பணிகள் முடிவடைந்த சென்னை சென்ட்ரல் – நேருபூங்கா, டிஎம்எஸ் – சின்னமலை இடையிலான சுரங்கவழிப் பாதைகளில் ரயில் போக்குவரத்தைத் தொடங்கி வைக்கும் விழா இன்று எழும்பூரில் நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இணையமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் ரயில் போக்குவரத்தைத் தொடங்கி வைத்தனர். அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் மேலும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த விழாவில், தமிழக துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகச் சட்டப்பேரவைத் தலைவர் தனபால், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் 2 கிலோமீட்டர் தொலைவுக்குப் பத்துரூபாயும் 2 முதல் 4 கிலோமீட்டர் வரை 20ரூபாயும், 4 முதல் 6 கிலோமீட்டர் வரை 30ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 10 கிலோமீட்டர் வரை 40ரூபாயும், 10 முதல் 15 கிலோமீட்டர் வரை 50 ரூபாயும், 15 முதல் 20 கிலோமீட்டர் வரை 60ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 20முதல் 50 கிலோமீட்டர் வரையும் 70 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

Related Posts