சென்னையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள்

சென்னையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலில் கரைக்கப்பட உள்ளன.

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த 13-ந்தேதி விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன. இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் 2 ஆயிரத்து 500 சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன. இந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்க 3 நாட்கள் போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இதன்படி 15, 16, 17 ஆகிய தேதிகளில் ஊர்வலம் நடத்த விநாயகர் சிலை வழிபாட்டு குழுவினரும் சம்மதம் தெரிவித்தனர். இதன்படி, நேற்று 135 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. மணலி, வில்லிவாக்கம், செங்குன்றம், திருவேற்காடு, கோயம்பேடு, போரூர், வியாசர்பாடி, திருவல்லிக்கேணி, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, ஆர்.கே.நகர்,கே.கே.நகர், மேடவாக்கம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட சிலைகள் பலத்த பாதுகாப்புடன் கடலில் கரைக்கப்பட்டன. பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர்,காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை, எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் ஆகிய 5 இடங்களில் சிலைகளை கரைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இன்று 2-வது நாளாக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகின்றன. இன்று மட்டும், சுமார் 2 ஆயிரத்து 300 சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன.பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் அதிக எண்ணிக்கையிலான சிலைகள் கடலில் கரைக்கப்படுகின்றன. இதையொட்டி, அங்கு ராட்சத கிரேன்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு சிலைகள் கரைப்பது கேமராக்கள் மூலமாகவும் கண்காணிக்கப்படுகிறது. விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி சென்னை மாநகர் முழுவதும் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விநாயகர் ஊர்வலத்தையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related Posts