சென்னை தலைமைச் செயலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட மு.க. ஸ்டாலின் கைது

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பேச முதலமைச்சர் அனுமதி மறுத்ததை கண்டித்து, சென்னை தலைமைச் செயலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை : மே-24

சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபால் தலைமையில் சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தை திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் புறக்கணித்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க திமுகவினர் அனுமதி கேட்டனர். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், தலைமை செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அறையின் முன்பு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உட்பட அனைவரும்  குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர்.

முதலமைச்சரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து, தலைமைச் செயலகத்தின் முன்பு மறியல் போராட்டத்தில், ஈடுபட்ட திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், தூத்துக்குடிக்கு முதலமைச்சர் இதுவரை நேரில் சென்று பார்க்கவில்லை எனவும், ஆட்சியர், எஸ்பியை பெயருக்காக இடமாற்றம் செய்துள்ளனர் எனவும் குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுகவினர் நாடகமாடுவதாக கூறினார். மேலும் தூத்துக்குடி சம்பவத்துக்கு எதிர்கட்சியினரை மக்களை தூண்டி விட்டார்கள் என்றும் பொதுமக்கள் கூட்டத்தில் சமூகவிரோதிகள் ஊடுவிவிட்டார்கள் என்றும் விளக்கமளித்தார்.

Related Posts