சென்னை பல்கலைகழகத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மாணவர் நீக்கம் தொடர்பாக சென்னை பல்கலைகழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கிருபா மோகன் என்ற மாணவர் கடந்த 2018-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் துறையில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்தார். இதையடுத்து அதே பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் துறையில் முதுகலை முதலாமாண்டு படித்து வந்தார். ஒரு மாதம் வகுப்புகளில் கலந்துக்கொண்ட அந்த மாணவரை நீக்கம் செய்து துறைத்தலைவர் உத்தரவிட்டார். அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டத்தில் தீவிரமாக இயங்கியதாலேயே தான் நீக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட மாணவர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னை நீக்கியது தவறு எனக் கூறி கிருபா மோகன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், மாணவர் கிருபா மோகனை நீக்கம் செய்தது ஏன் என வரும் 24 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு சென்னை பல்கலை கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

Related Posts