சென்னை புழல் சிறையில் வேல்முருகனுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்திப்பு

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று நேரில் சந்தித்து பேசினார்.

சென்னை : மே-28

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கடந்த மாதம் 1ம் தேதி, சுங்கச்சாவடி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக வேல்முருகன் நேற்று காலை புழல் சிறையில் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து சாப்பிட மறுத்த வேல்முருகன், இன்று 2-வது நாளாக புழல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது கோரிக்கைகளுக்கு ஆதரவாக 23 பேர் வேல்முருகனுடன் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை புழல் சிறையில் உள்ள வேல்முருகனை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று நேரில் சந்தித்தார். புழல் சிறையில், வேல்முருகனுடன் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள 23 பேரையும் வைகோ சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மக்கள் நலனுக்காக போராடுபவர்களை, விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Related Posts