சென்னை மெரினாவில் காந்தி சிலைக்கு தலைவர்கள் மரியாதை

மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு ஆளுநர், முதல்வர், துணை முதல்வர்  உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

        மகாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருப்படத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்  துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அமைச்சர்கள்  மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

        இதேபோல் காந்தியின் திருவுருப்படத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன், நடிகர் எஸ்.வி. சேகர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

        பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசு, மது இல்லா மாநிலமாக உருவாகுவது தான் காந்தியின் கொள்கை எனவும், மற்ற மாநிலங்களைப் போல் தமிழகத்தில் பூரண மது விலக்கு அமல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

        ஜி.கே வாசன் பேசுகையில், தமிழகத்தில் மதுவிலக்கை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுபடுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மீத்தேன் எடுப்பதற்கு புதிதாக 5ஒப்பந்தங்கள் செய்து இருப்பது கண்டனத்துகுரியது என அவர் கூறினார்

        நடிகர் எஸ் வி சேகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேச தலைவர்களை சாதியில் அடையாளப்படுத்த கூடாது எனவும், தமிழகத்தில் சகிப்புதன்மை குறைந்து வருவதாகவும் தெரிவித்தார். சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஏறுவதெல்லாம் இறங்கும், நல்லதே நடக்கும் என்றார்

        இதனிடையே, கள்ளுக்கு அனுமதி கோரி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் காந்தி சிலை முன்பு கள் வைத்து ஆர்பட்டத்தில் ஈடுபட முயன்றனர், அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது  செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்,  கள் சத்துமிக்க பானம் எனவும், அதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Related Posts