சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவு மண்டபத்துக்கு ஈ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். அடிக்கல் நாட்டினர்

 

 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினாவில் கட்டப்படும் நினைவு மண்டபத்துக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து அடிக்கல் நாட்டினர்.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்துக்கு அருகில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் 50 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பில், நினைவு மண்டபம் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, 36 ஆயிரத்து 806 சதுர மீட்டர் பரப்பளவில் அமையும் ஜெயலலிதா நினைவு மண்டபம், பீனிக்ஸ் பறவை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மெரினாவில், ஜெயலலிதாவின் நினைவிடத்தில்  மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. காலை 6.30 மணிக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்கான யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இன்று காலை 9 மணிக்கு ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்று, அடிக்கல் நாட்டினர். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ, காமராஜ், வேலுமணி, சண்முகம், செல்லூர் ராஜு, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஜெயலலிதா நினைவு மண்டப கட்டுமானப்பணிகளை வரும் நவம்பர் மாதம் இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தன்று, நினைவு மண்டபத்தை பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Related Posts