செ.மாதவன் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல்

திராவிட இயக்கத் தூண்களில் ஒருவரும், பேரறிஞர் அண்ணாவின் பாசத்திற்குரியவருமான செ.மாதவன் மறைவு திராவிட இயக்கத்துக்குப் பேரிழப்பாகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை : ஏப்ரல்-04

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 1962 ஆம் ஆண்டு திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்ற அண்ணன் மாதவன், அந்த ஐந்தாண்டு காலத்தில் சட்டமன்றத்தில் எடுத்த வைத்த வாதங்கள், தொடுத்துத் தந்த புள்ளி விவரங்கள் கல்லூரி மாணவனான என்னை காந்தமெனக் கவர்ந்தது.

1964, 65, 66 ஆண்டுகளில் அவர் பேசும் பொதுக்கூட்டங்களுக்கு தவறாமல் செல்வேன்.

1967 தேர்தலில் வெற்றி பெற்று அறிஞர் அண்ணாவின் அமைச்சரவையில் சட்டத்துறை, தொழில்துறை அமைச்சராக தமது செயல் திறத்தால் புகழ் பெற்றார்.

1969 பிப்ரவரி 2ஆம் தேதி இரவு அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அறிஞர் அண்ணா உயிர்நீத்த வேளையில், அந்த மருத்துவமனையில் நானும் இருந்தேன். தரையில் அமர்ந்து அழுதுகொண்டு இருந்த மாதவன் அவர்களின் தோளைப் பற்றியவாறு மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் கண்ணீர் விட்ட காட்சி என் மனதைவிட்டு மறையவே இல்லை.

டாக்டர் கலைஞர் அவர்களின் அமைச்சரவையிலும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டார். 1975 ஆம் ஆண்டு குருவிகுளம் ஒன்றியப் பெருந்தலைவராக இருந்த நான், ஒன்றிய அலுவலகத்தில் அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் படத்தை அண்ணன் மாதவன் அவர்களைக் கொண்டு திறக்க வைத்து, விழா நடத்தினேன். அன்று என் இல்லத்திற்கு வந்து உணவருந்திச் சென்றார்.

நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் உறுப்பினராக இருந்தபோதும் திராவிட இயக்கத்தின் மேன்மை குறித்தும், நலன் குறித்தும், எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அண்ணன் மாதவன் அவர்கள் என்னிடம் விரிவாக விவாதிப்பார்.

இன்றைய காலகட்டத்தில் திராவிட இயக்கத்திற்கு ஆலோசனைகள் தரவேண்டிய நேரத்தில் மாதவன் மறைந்தார் என்ற செய்தி என்னை நிலைகுலையச் செய்தது. அவரது மறைவால் கண்ணீரில் தவிக்கும் உற்றார் உறவினர்களுக்கும், திராவிட இயக்கத் தோழர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Related Posts