சேலத்தில் புதிய மேம்பாலங்களை திறந்து வைத்தார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி

 

 

அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி அடைந்து வருவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திருவாக்கவுண்டனூரில் இருந்து குரங்குச்சாவடி வரை, ஆயிரத்து 280 மீட்டர் தொலைவுக்கு 82 கோடி ரூபாய் மதிப்பில் 4 வழிப்பாதை கொண்ட புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனால் தருமபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரில் இருந்து வரும் வாகனங்கள் நெரிசலின்றிச் சேலம் மாநகருக்கு வந்து செல்ல முடியும். சேலத்தில் இன்று நடைபெற்ற விழாவில், திருவாக்கவுண்டனூரில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தாரமங்கலத்தில் 70கோடி ரூபாய் மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைத்து மேம்பாலம் கட்டும் பணிக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். மேலும், மாநகரக் காவல்துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள குறுந்தகட்டையும் முதலமைச்சர் வெளியிட்டார். இந்த விழாவில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, மாநகரக் காவல் ஆணையர் சங்கர் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதிதாக திறக்கப்பட்டுள்ள மேம்பாலங்கள் மூலம் சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசல் குறையும் என தெரிவித்தார். தமிழகத்தில் எந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும் அதை உரிய நேரத்தில் அரசு நிறைவேற்றி வருகிறது எனக்குறிப்பிட்ட முதலமைச்சர், அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தார்.  

Related Posts