சேலம் – சென்னை 8 வழிச்சாலை தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? : உச்சநீதிமன்றம் கேள்வி

சேலம் – சென்னை 8 வழிச்சாலை தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை – சேலம் இடையே 8 வழிச்சாலைத் திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்துக்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மொத்தம் ஆயிரத்து 900 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.

இத்திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், விவசாயிகள், பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, தருமபுரி மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம்,சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும், இத்திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வாரங்களுக்குள் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்ட தீர்ப்புக்கு  எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்குவந்தது.அப்போது, சாலை திட்டத்துக்கான நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று உள்ளதாகவும்,  இப்பணிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் திட்டத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்திற்கு எத்தனை பேர்  எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,   எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு தமிழகத்தில் எதிர்ப்பு இருக்கும் போது, இத்திட்டத்தை வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே என்று வினவினர். அப்போது சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் சாலைத் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என மத்திய அரசு உறுதி அளித்தது.

இதையடுத்து வழக்கின் விசாரணையை வரும்  31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக நாளை மத்திய அரசு மனுத்தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தனர்.

Related Posts