ஜம்மு-காஷ்மீரில் தலைவர்களை வீட்டு சிறையில் வைத்திருப்பது கண்டனத்திற்குரியது : ப.சிதம்பரம் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் தலைவர்களை வீட்டு சிறையில் வைத்திருப்பது கண்டனத்திற்குரியது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரையை சீர்குலைக்க பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக மாநில உள்துறை அமைச்சகத்துக்கு சில தினங்களுக்கு முன் ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அமர்நாத் யாத்ரீகர்களும், சுற்றுலாப் பயணிகளும் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு காஷ்மீரை விட்டு விரைவில் வெளியேற வேண்டும் என்று மாநில அரசு வெள்ளிக்கிழமை இரவு அறிவுறுத்தியது. அதற்கு முன், ஜம்மு-காஷ்மீருக்கு கூடுதலாக 10,000 ராணுவ வீரர்களை மத்திய அரசு அனுப்பி வைத்தது. ஏற்கெனவே, அந்த மாநிலத்தில் அதிக அளவில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதால், கூடுதலாக ராணுவம் குவிக்கப்பட்டதால் பல்வேறு யூகங்கள் எழுந்தன. பாதுகாப்பு காரணங்களுக்காக, ஜம்மு-காஷ்மீரில் இன்று திங்கள்கிழமை காலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த மாநில முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஜம்முவில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரே நேரத்தில் ஒரு இடத்தில் 4க்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும்வரை இந்த நிலை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் தலைவர்களை வீட்டு சிறையில் வைத்திருப்பது கண்டனத்திற்குரியது என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்க பதிவில், ஜம்மு-காஷ்மீரில் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்திருப்பது கண்டனத்திற்குரியது. அரசு அதன் நோக்கங்களை அடைவதற்காக தலைவர்களை வீட்டுக் காவலில் அடைத்து வைத்திருப்பது அனைத்து ஜனநாயக விதிமுறைகளையும் கொள்கைகளையும் மீறும் என்பதற்கான சமிக்ஜையாகும். அரசின் இந்த செயல் ஜனநாயகத்துக்கு எதிரானது. மேலும் ஜம்மு-காஷ்மீரில் மிகப்பெரிய நெருக்கடி ஏற்படுமா என்பது இன்றைக்குள் தெரிந்துவிடும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Related Posts