ஜம்மு-காஷ்மீரில் மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த 7 பேர் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரில் மினி பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயமடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கனேட்டர் கிராமத்தில் இருந்து ரஜோரி மாவட்டத்தில் உள்ள ஷாட்ரா ஷெரீப் என்ற புனித தலத்திற்கு 32 பயணிகளை ஏற்றிக்கொண்டு மினி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

தேரா கி கலி பகுதிக்கு அருகிலுள்ள மேகி மோர் என்ற இடத்தில் சென்ற போது, பேருந்து ஒரு வளைவில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 1000 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், உள்ளூர்வாசிகளுடன் சேர்ந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இரண்டு பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.

Related Posts