ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பறிப்பு

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு பறித்துள்ளது. பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் மோடி இன்றுகாலை ஆலோசனை நடத்தினார்.இதையடுத்து மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை 370-ஐ நீக்குவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவை நாடாளுமன்றத்தில் அறிவிப்பதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவைக்கு வந்தார். அவர் பேச தொடங்கும் முன், காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், காஷ்மீரில் நடப்பது என்ன? அங்கு போர் சூழல் நிலவுவதால் அதுபற்றி விளக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். அவருக்கு ஆதரவாக சில எம்.பிகள் குரல் கொடுத்தனர். அவர்களை சமாதானப்படுத்திய அவை தலைவர் வெங்கையா நாயுடு, அமித் ஷாவை பேச அழைத்தார். இதை உறுப்பினர்கள் ஏற்காததால், அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் கடும் அமளிக் கிடையே, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவு நீக்குவதாக அமைச்சர் அமித் ஷா  அறிவித்தார். இதை ஏற்காமல் உறுப்பினர்கள் பேசியதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யக்கூடாது என எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். சிறப்பு அந்தஸ்து ரத்தானதால் நாடாளுமன்றத்தில் இயக்கும் சட்டங்கள் இனி காஷ்மீருக்கும் பொருந்தும். இதுபோன்ற கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில், அடுத்த அறிவிப்பையும் அமித்ஷா வெளியிட்டார். இதன்படி ஜம்மு காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. அதாவது சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் செயல்படும். சட்டப்பேரவை இல்லாத யூனியன்பிரதேசமாக, அதாவது, அந்தமான் நிகோபர், லட்சத்தீவு போன்று லடாக் செயல்படும்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு வெட்கக் கேடானது என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ் உறுப்பினர்களும், வைகோ, திருச்சி சிவா போன்ற உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வரலாற்று நிகழ்வுகளை தியாகங்களை மறக்கடிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் உறுப்பினர் குலாம்நபி ஆசாத் குற்றம்சாட்டினார். சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்திருப்பது ஜனநாயகப் படுகொலை என்று வைகோ குற்றம்சாட்டினார். நெருக்கடி நிலையை மீண்டும் அமல்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதாக குறிப்பிட்ட வைகோ, நெருக்கடி நிலையால் நீங்களும் பாதிக்கப்பட்டவர்தான் என்பதை உணரவேண்டும் என அவைத்தலைவர் வெங்கய்யா நாயுடுவை நோக்கி கூறினார்.

சட்ட நகலை கிழிக்க முயன்ற இரண்டு எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ஒரு புறம் நாடாளுமன்றத்தில் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக அமித் ஷா அறிவிக்க, மறுபுறம், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கான அறிவிப்பாணயை மத்திய அரசு வெளியிட்டது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யும் முடிவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

Related Posts